Friday, November 25, 2016

அன்பின் பரிசு

அன்பை காட்டி
முதுகில் குத்தி
ஏமாற்றியவர்களுக்கெல்லாம்
அன்பையே பரிசாக தந்துவிடுகிறேன்
வெறுப்பை ஒருபோது உமிழ்வதில்லை
என்கிற கொள்கையை
முடிந்த அளவு கடைபிடிக்கிறேன்

நான் வளர வளர
என்னை ஏமாற்றுபவர்களின்
எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது
அவர்கள் மீது என் அன்பும் பெருகிக்கொண்டே போகிறது.

ஒருவேளை
ஒருகட்டத்தில்
என்னால் அன்பின் பரிசை
அவர்களுக்கு தரமுடியாத
சூழல் வந்துவிடுமோ என்கிற
எண்ணமும் அடிக்கடி வருவதுண்டு .


அதுபோல் சுழல் நேரிடும்போது
அன்பை கடன் வாங்க நேரிடுகிறது
யாரோ என்மேல் உள்ள கருணையில்
அந்த அன்பை கடனாக
அவ்வவப்போது தந்துவிட்டு செல்கின்றனர்
அந்த அன்பையெல்லாம் சிறுகசிறுக சேர்த்துவைத்து
என்னை ஏமாற்றி
என்னிடம் அன்பின் துரோகம் செய்துவிட்டு
செல்போருக்கு
அவ்வவப்போது
அந்த அன்பை பரிசாக தந்துவிடுகிறேன்.
அன்பு தொடர்கிறது

ஏமாந்தவன் ஏமாற்றியவனுக்கே
அன்பை பரிசாக தருகிறான்
ஏமாற்றியவன் ஏமாந்தவனை
கோமாளியாக பார்க்கிறான்
சரியான ஏமாளி
என்றும் எண்ணுகிறான்
ஏமாந்தவனிடம் வாங்கிய
அன்பின் பரிசு
அவனுள் அப்படி ஒரு சிந்தனையை
தூண்டிவிட தொடங்கும்
அதை அவன் உணர்வதில்லை
அன்பின் பரிசுதான்
அவனுள் செலுத்தப்பட்ட
அன்பின் அம்பு என்று
அந்த அம்பு அமுதும் நஞ்சும் கலந்தது
அவன் திருந்தினால் அது அமுதை அவனுள் செலுத்தும்
அவன் மறுதலித்தால் அது நஞ்சை அவனுள் செலுத்தும்

அன்பின் பரிசு
விலை உயர்ந்தது அல்ல
விலை குறைந்ததும் அல்ல
அனால்
விலை மதிப்பில்லாதது
அதை தருபவனும் விலை மதிப்பில்லாதவன் தான்

அவனை காப்பது
அன்பின் கடமை



Tuesday, November 22, 2016

கடவுள் இருக்கிறார்

உண்டியலுக்கு அறங்காவலர் இருக்கிறர்,
கண் காது வாய் கை கால் உடல்களுக்கு சிற்பி இருக்கிறார்,
உயிருக்கு அர்ச்சகர் இருக்கிறார் ,
இவர்களை பிழைக்க வைக்க நாம் இருக்கிறோம் ... அவ்வளவுதான் .
ஆனால் கடவுள் உருவம் இல்லா மனதில் இருக்கிறார் மனிதத்தில் இருக்கிறார்.
அவரவர் நம்பிக்கையில் இருக்கிறார்.
இப்படி எதோ ஒரு வகையில்
நம்மோடு கடவுள் இருக்கிறார்
கடவுள் இல்லை என்கிற சொல்லிலும் கடவுள் இருக்கிறார்

கடவுள் இல்லை என்றாலே
அது ஒரு முடிவு இல்லை
அதுவே ஒரு தேடலின் தொடக்கம்
கடவுள் இல்லை என்று நிருபிக்க
தொடங்கும் தொடக்கம்
அது இன்னும் தொடக்க நிலையிலே தான் இருக்கிறது.
கடவுள் இல்லா திசையை தேடி கொண்டே தான் இருக்கிறது.

அந்த தேடலில் போலி கடவுள்களை
அது கண்டுபிடிக்கிறது
அதை போலி என்று அடையாள படுத்தி அழிக்கிறது

இப்படி நிஜ கடவுளை இல்லை என்று நிரூபிக்க
அது மேற்கொள்ளும் பயணம்
எதோ ஒரு உண்மையை
வெளிக்கொணரும் என்றே தோன்றுகிறது

கடவுள் இருக்கிறார் என்று
கோடி கோஷம் எழுந்தாலும்
கடவுள் இல்லை என்கிற
ஒரு சொல்
அதனுள் ஊடுருவி
கடவுளை பொய் செய்ய விரும்பும்
அந்த பொய்
நிஜத்தில்
எங்கோ கடவுள் இருக்கிறார்
என்கிற சிந்தனையை தூண்டி விடும்
நிஜ கடவுளை
தேட செய்து விடும்


Saturday, November 19, 2016

வெற்றியின் கொடி

என் மீது வீசப்பட்ட
கற்களில் இருந்து
என் கோட்டையை கட்டி இருக்கிறேன்
சந்தேகமிருந்தால் அதை சோதித்து பாருங்கள்
அதன் பலத்தை அதிலுள்ள
கற்களின் தரமே சொல்லும்
ஆகிலும் அதினால் உண்டான
காயங்களின் கதையை அது
ஒருபோதும் சொல்லாது

இங்கு
யாவரும் வரலாம்
இலகுவாக இளைப்பாறலாம்
அதன் பாதுகாப்பு அரணும்
அதில் வசிக்கும் மக்களின் மகிழ்வும்
உங்களை ஆச்சரியப்படுத்தும்

பாருங்கள் இதோ மேலே பாருங்கள்
கோட்டையின் மீது உயரத்தில்
வெற்றியின் சின்னமாய்
என் கொடிப்பறக்கிறது.



அறுத்து எரியும் காலம்

ஆர்வக் கோளாறு காரணமாக
ஆத்திரத்தில் ஆறே மாதத்தில்
அறுத்து எரியத் தயாராகி விடுகின்றனர்
இளம் வயது ஜோடிகள்.

ஆத்திரத்தை ஆறப்போட
பழகிகொள்ளாதவர்கள்
ஆணவத்தில் உறவை அழித்துகொள்கிறார்கள்.
ஆளை மாற்றி
புது ஆளைத் தேடுகிறார்கள்
அதே ஆணவத்தை
ஆழ்மனதில் சுமந்துகொண்டு.


Friday, November 18, 2016

அவளை மீண்டும் சந்திப்பேன்

அவளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு என தெரியவில்லை ஆனால்
அவளை பார்க்கும் முன்பே ஒரு உணர்வு வந்து விடும்
அவளை பார்க்கப்போகிறேன் என்று
அது எனக்கு சொல்லாமல் சொல்லிவிடும்

ஏன் இப்படி வருகிறது
அவளை ஏன் இப்படி
மீண்டும் மீண்டும் நினைவுட்டுகிறது
என்று தோன்றும்

பிறகு அப்படியல்லாம்
நடக்காது
இது வெறும் நினைவுதான்
என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன்

ஆனால் அதை நான்
மறக்கும் வேளையில்
அந்த நிகழ்வு நடந்துவிடும்

ஆமாம் அவள் நிஜமாகவே வருவாள்
என் கண்கள் முன்னே
அது நிகழும்

அவள் ஓரக்கண்ணால் என்னை பார்த்து
வெட்கத்துடன் புன்னகைத்துவிட்டு
என்னை கடந்து செல்வாள்

ஏன் இப்படி நடந்தது
எப்படி இது நடந்தது
என்று நான் எனக்குள்ளே
அதிசயத்து கிடப்பேன்

அவள் வரவிருப்பது
எப்படி எனக்கு முன்பே தெரியும்
என்று எனக்கு நானே கேள்வி எழுப்பிகொள்வேன்  

அவள் கடந்தபின்பும்
அவள் நினைவும்
அவள் சிரிப்பும்
அவளாக என்னுள் தங்கிவிடும் .
அவளுக்காக காத்திருக்கவும் செய்துவிடும்
அவளை மீண்டும் சந்திப்பேன் என்கிற சிந்தனையுடன்



Monday, November 14, 2016

கரம் சேரா காதல்

காசுக்காக காதலிக்கிறேன்
என்று அவள் நினைத்து விடுவாளோ
என்று விலகி இருந்தேன்

நம் கதை தெரிந்து
காதலிக்க மறுக்கிறானோ
என்று அவள் விலகி இருந்தாள்

எனக்கோ அவள் கதை பொருட்டல்ல
அவளுக்கோ காசு ஒரு பொருட்டல்ல

அப்படி இருந்தும்
தவறான புரிதலால்
அவளுக்கும் எனக்கும்
சிறு சிறு தயக்கம்

இருவரும்
இறுதிவரை
பேசிக்கொள்ளவே இல்லை

ஆகவே
எங்கள் காதல்
கண்களை தாண்டி
கரம் சேரவே இல்லை





Sunday, November 6, 2016

அடுப்படி கனவுகள்

விறகை கூட்டி
நெருப்பை மூட்டி
அடுப்பை பற்ற வைத்த பின்
தணலை குழல் மூலம் ஊதி
தக தகவென எரிய விட்டுகொண்டிருப்பாள்

பானையில் உலை கொதிக்கும் நேரத்தில்
கிண்ணத்தில் புளி கரைத்து கொண்டிருப்பாள்

வீட்டுக்கு வரும்போது கணவன் கண்டிப்பாக
அரிசி வாங்கி வாருவார் என்கிற மிகை நினைப்பில்
மிதந்து கொண்டிருப்பாள்

கடைசியில்
கருகிய விறகுகள்
கரும் புகையால்
அவள் கனவுகளை கலைத்து
அவள் கண்களில் நீர் வடிய செய்து கொண்டிருக்கும்


Saturday, November 5, 2016

ஒட்டிய புத்தகம்

என் வாழ்க்கை
சில சம்பவங்கள் நிறைந்த கிழிந்த காகிதங்கள் தான்
அதை நான் அவ்வப்போது தேடி தேடி ஒன்றாக ஒட்டி வருகிறேன்
இறுதியாக ஒரு முழு புத்தகத்தை வடித்துவிடுவேன்
என்கிற நம்பிக்கையில்



Thursday, November 3, 2016

வாய்பூட்டு

வாயை மூடி இருந்தால்
கிடைக்க வேண்டிய பல வாய்ப்புகள் பறிபோகும்
வாயை திறந்து சத்தமாய் கேட்டால்
இருக்க வேண்டிய சில மிச்சங்களும் பறிபோகும்
அப்படியேன்றால் என்ன செய்வது ?
நேரம் காலம் சூழல் புரிந்து
கேட்க வேண்டிய நேரத்தில் கேட்பதும்
மவுனிக்க வேண்டிய நேரத்தில் மவுனிப்பதும்
வாய்மை தவறாமல் இருப்பதும்
வாய்ஜாலத்துக்கு மதிமயங்காமல் இருப்பதும்
வாய்மொழியால் பிறர் சூழ்ச்சிகளுக்கு ஆட்படாமல் இருப்பதும்
வாய்மொழியால் பிறர் முகம் கோணாமல் நடப்பதற்க்கும்
வாய்க்கு ஒரு பூட்டு போடுவது சாலசிறந்தது